பிரபஞ்சமும் தாவரங்களும் – நூல் அறிமுகம்

பிரபஞ்சமும் தாவரங்களும்

வட வேங்கடம் தென் குமரி

ஆயிடைத்

தமிழ் கூறும் நல் உலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத்தோனே …… – 1-8 – சிறப்புப்பாயிரம் – பனம்பரனார். – தொல்காப்பியம்.

என்ற தொல்காப்பிய பாயிரத்தின் வழிநின்று…

தமிழ் நாட்டில், நம் முன்னோர்களின் வழக்கத்தில் இருந்தவைகளையும் அவைகளை பதிவுச் செய்திருந்த நூல்களில் இருந்தும், நம்பிக்கை அடிப்படையிலான செய்திகளைத் தொகுத்து இந்நூல் வழங்கப்படுகின்றது.

மனிதன் தோன்றி வழிபாடு துவங்கிய காலகட்டத்தில், மனிதர்கள் தம் கண்முன் தெரியும் பயன்பாட்டில் உள்ளவற்றை (இயற்கையை) தெய்வமாக வழிபட்டுள்ளனர். கீழ்க்காணும் இலக்கியச் சான்றுகள் மூலம் தாவரங்களை வழிபட்டதாகவும் தெய்வ வழிபாட்டிற்குச் சிறந்த இடம் பிரபஞ்சம் என்றும் தெளிவாகத் தெரிகின்றது.

புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்

போக்குகின் றோம்அவ மேயிந்தப்பூமி

சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்

அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்

படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே – திருப்பள்ளி எழுச்சி (திருவாசகம். 346.10)

இறைவனை வழிபடத்தக்க இடம் இப்பூமி என்றும், இங்கு வந்து வழிபடாத நாள் பிறவாத நாள் என்றும் உணர வேண்டும் என்பதாம்.

இப்பூமியின் பெருமையை ‘வானிடத்தவரும் மண்மேல் வந்தனர்’ என்ற சிவஞான சித்தியின் குறிப்பால் காணமுடிகின்றது.

இதனால், இறைவன் ஆட்கொள்ளும் இடம் இவ்வுலகம் எனவும் மரங்களைக் கடவுளாகக் கருதினர் எனவும் கூறப்பட்டுள்ளது.

அம் மா மேனி தொல் நலம் தொலைய,

துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே,

கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச்

சேவலொடு புணராச் சிறு கரும் பேடை

இன்னாது உயங்கும் கங்குலும்.    – (அகநானூறு.270.12)

எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய

கடவுள் முதுமரத்து, உடன் உறை பழகிய

தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,

வாய்ப் பாறை அசாஅம், வலி முந்து கூகை!   – (நற்றிணை.83:1-2)

முல்லை தாயகல் அதர்ச் சிறு நெறி

அடையாது இருந்த அம்குடிச் சீறூர்த்

தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும்

நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து        – (நற்றிணை – 343 : 1-4)

அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை

ஆலமும், கடம்பும், நல் யாற்று நடுவும்,

கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,

அவ்வை மேவிய வேறு வேறு பெயரோய்!

பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்  – (பரிபாடல் – 4 : 66-69)

கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம்

நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்

செலவு ஆனாவே, கலி கொள் புள்ளினம்;

அனையர் வாழியோ இரவலர்; அவரைப் – (புறநானூறு – 199 : 1-4)

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்

கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்

பசைஇப் பசந்தன்று நுதலே

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே.     – (குறுந்தொகை – 87 : 1-5)

கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி

அந்தி மாட்டிய நந்தா விளக்கின்

மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ

வம்பலர் சேர்க்கும் கந்துடைப் பொதியில்     – (பட்டினப்பாலை – 246-249)

முருகனைக் கடம்ப மரத்திலும், சக்தியை வேம்பிலும் கண்டனர். அரசு மற்றும் ஆலம் முதலிய மரங்களிலும் மக்கள் தெய்வங்களை வழிபட்டனர்.

– இராமலிங்கத் தம்பிரான் சுவாமிகள், 1970:2

இக்காலத்தில் அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ற உருவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடத் துவங்கியதால் இயற்கையை வணங்குவது முற்றிலுமாக மாற்றப்பட்டு விட்டது.

உருவ வழிபாட்டில் திருக்கோயில்களை நிர்மாணம் செய்து, தெய்வ விக்கிரகங்களை அமைத்து அந்த தெய்வ விக்கிரகங்களுக்கு எந்திரத் தகடுகள், நவபாஷாணங்கள், பஞ்சலோகம் திரிபந்தனம் கூட்டி வைத்து, அஷ்டபந்தனம் சாத்துப் படி செய்து, திருக்குடமுழக்கு நன்னீராட்டு செய்து, தெய்வ விக்கிரகங்களுக்கு உயிர்ப்பு செய்து தெய்வநிலை அடையலாமென மாற்றம் செய்கின்றனர். விக்கிரகங்களுக்குத் தெய்வீகத் தன்மை நிலைத்திருக்க உயிர்ப்புச் சக்தி குறையாமல் இருக்கப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கூறிய முறைப்படி திருக்குடமுழுக்கு நன்னீராட்டு செய்யும் வழக்கத்தைச் செய்து வருகின்றனர்.

இயற்கை வழிபாடானத்  தாவர வழிபாட்டில் மேற்கூறிய தெய்வீகநிலை அடைய  எந்தச் சடங்கும் தேவை இல்லை. தாவரங்களை நட்டு வளர்த்தாலே போதுமானது. தாவரங்கள் இயற்கையிலேயே தெய்வீகத் தன்மை பெற்றுள்ளன.

ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்

போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்

கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை

சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. – 403

முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வா வளங்குன்றும்

கன்னங் களவு மிகுத்திடுங் காசினி

என்னரு நந்தி எடுத்துரைத் தானே.      – 404 – திருக்கோயிற் குற்றம்

கோயில்களில் அன்றாட வழிபாடு, சிறப்புநாள் விழாக்கள் முதலியவை இல்லாதொழியினும், ஆகமங்களில் சொல்லப்பட்ட முறை தவறி நடப்பினும், நாட்டில் தீர்க்கலாகாத நோய்கள் பரவி, மழையும் பொய்த்துப்போக, சிற்றரசரால் வணங்கப்படுகின்ற பேரரசர்களும் பகைவரை வெல்லும் வலியிலராய்த் தம் நாட்டை இழப்பர்.

கோயில்களில் மேற்கூறிய குறைகள் உளவாகுமாயின், அரசர்கள் வலிமையிழத்தலேயன்றிப் பிற தீமைகளையும் அடைவர். நாட்டில் விளைவும், பிற வருவாய்களும் குறையும். மாளிகைகளில் கன்னம் இட்டுக் களவாடுதல், கொள்ளை முதலிய பிற களவுகள் மிகுதியாகும் என்று திருமூலர் கூறுகின்றார்.

திருஉருவச்சிலைகளுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குடமுழுக்கு நன்னீராட்டு செய்யத் தாமதம் செய்யும் பட்சத்திலும் வேறு ஏதாவது காரணங்களாலும் தெய்வீகத் தன்மை மற்றும் உயிர்ப்புச் சக்தி குறைவு ஏற்படும் பட்சத்தில் அந்தத் திருக்கோயிலில் எந்த விதத்திலும் தெய்வீகத் தன்மை நிலைத்திருக்க வேண்டும் என்கின்ற நோக்கில் ஒவ்வொரு திருக்கோயிலிலும் தல விருட்சங்கள் அமைத்து வழிபட்டு வருகின்றோம்.

ஆகையால் இயற்கையாக வளர்ந்த அத்தகைய மரங்களை (தாவரங்கள்) வழிபடுவது சிறப்பானது என்கிற அடிப்படையில் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.