சிறுதானியங்களும் உணவுவகைகளும்
உணவே அடிப்படை
மனிதர்களுடைய வாழ்விற்கு அடிப்படையானது உணவே ஆகும். இந்த உணவானது தானியம் (Grains), சிறு தானியம் (Millets), பருப்பு (Pulses), எனப் பலவற்றை உள்ளடக்கியது. இவையே அல்லாமல் பழங்கள் (Fruits), காய்கறிகள் (Vegetables), கீரைவகைகள் (Spinach) எண்ணெய் வித்துக்கள் (Oil seed) போல்வனவும் மனிதனுக்கு உணவாகின்றன. மேலும், பறவை (Birds) – விலங்குகளின் (Animal) இறைச்சி, பால், முட்டை முதலியவைகளையும், மீன் போன்ற கடல் உணவுகளையும் (Sea food), மனிதர்கள் உணவாகக் கொள்கின்றனர்.
சங்க இலக்கியத்தில் உணவு
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை – 335:4-6. – புறநானூறு
என்று மாங்குடி கிழார் ‘கருப்பு நிறத்தை அடித்தாள்களில் கொண்ட வரகு, பெரிய கதிர்களை உடைய தினை, சிறிய கொடிகளில் விளையும் கொள், புள்ளிகள் போன்று தோன்றும் விதைகளை உடைய அவரை என்ற இந்த நான்கும் அல்லாமல் உணவுப் பொருள் வேறு இல்லை’.
கூலவகைகள் – The cereals
தாவரங்களின் மூலமாகக் கிடைக்கும் உணவுவகைகளில் குறிப்பிடத்தக்கது தானியங்களாகும் (Cereals). தானியம் (Grains), சிறுதானியம் (Millets), பருப்பு (Pulses) மற்றும் எண்ணெய் வித்துக்கள் (Oil seed) ஆகிய நான்கும் சேர்ந்ததைக் ‘கூலவகைகள்’ என்று குறிப்பர்.
சங்க இலக்கியத்தில் கூலம்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக் – 13:23 – பதிற்றுப்பத்து
முல்லை நிலத்தில் விளையும் கூலங்களை விற்கும் வணிகர் குடியைப் பேணி.
பயம்கடை அறியா வளம்கெழு சிறப்பின்
பெரும்பல் யாணர்க் கூலம் கெழும – 1047:6-7 – பதிற்றுப்பத்து
‘வறுமை அறியாத வளம்பொருந்திய சிறப்பினால், பெரும் பலம் பொருந்திய வணிகத்தில் புதுப்புதுக் கூலங்கள் பெருக’ எனத் தானிய (கூல) வணிகம் நடைபெற்றது என்ற பதிவுகளும்,
விரவுவேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர்புதை மாக்கண் கடியக் கழற – 29:11-12 – பதிற்றுப்பத்து
பல்வேறு தானியங்களைக் (கூலங்கள்) குருதியுடன் கலந்து; கரடியின் தோலால் ஆனா முரசு முழங்க,
செங்கள விருப்பொடு கூலம் முற்றிய
உருவச் செந்தினை குருதியொடு தூஉய் – 19:5-6 – பதிற்றுப்பத்து
போர்க்களம் புகும் விழாவில் கூலங்களுள் ஒன்றான நிறம் பொருந்திய செந்தினையைக் குருதியொடு கலந்து தூவிப் படையலிடுவார்கள். தானியங்கள் (‘கூலம்’) சங்க கால மக்களின் வாழ்வியலில் கலந்த படையல் பொருட்களாக இருந்தன என்ற பதிவுகளும் சங்க கால இலக்கியத்தில் காணப்படுகின்றன.
தானியங்களும் (Size) வகைகளும்
தானியங்களை, அவற்றின் அளவை, உருவத்தை, வடிவத்தை (Size), அடிப்படையாகக் கொண்டு, பெருந்தானியங்கள், சிறு தானியங்கள், புல்லரிசித் தானியங்கள் என்று மூன்றாகப் பகுத்துக் கூறலாம்.
பெருந் தானியங்கள்
இப்பெருந்தானியங்கள் பெரும்பாலும் வளமான நீர்ப்பாசன வசதியுள்ள நிலங்களில் விளைவிக்கப்படுவன; அளவால், ஏனைய தானியங்களை நோக்கச் சற்றே பெரிதானவை. நெல் (Paddy), கோதுமை (Wheat), பார்லி (Barley) ஆகிய மூன்றும் இப்பகுப்பில் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன. இவற்றைத் தவிர மக்காச்சோளமும் (Maize) இப்பிரிவுத் தானியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவற்றுள் சுமார் 60-70% கார்போ ஹைட்ரேட் (Carbohydrates) மற்றும் புரதம் (Protein), கொழுப்பு (Fat), வைட்டமின்கள் (Vitamin) உள்ளன. இத்தானியங்களின் தாவரவியற்பெயர்களும், பொதுப்பெயர்களும் கீழே தரப்படுகின்றன.
தானியங்கள் பட்டியல்
பெருந்தானியங்கள் தாவரவியல் பெயர் ஆங்கிலப் பெயர்
நெல் – Oryza sativa L Paddy
கோதுமை – Triticum aestivum L Wheat
பார்லி – Hordeum vulgare L Barley
ஓட்ஸ் – Avena sativa Oats
மக்காச்சோளம் – Zea mays L. Maize
சிறுதானியங்கள்
அளவால் உருவத்தில் வடிவத்தில் (Size) சிறியனவும், மிகச்சிறியனவுமான தானியங்களை முறையே சிறுதானியங்கள் (MIllets) குறுந்தானியங்கள் (Minor millets) என்ற அழைப்பர். பாசன வசதி இல்லாததும், வறட்சியைத் தாங்கக்கூடியதுமான புன்செய் நிலங்களில் மானாவரியாக இவை விளைவிக்கப்படுகின்றன. இவை கிராமப்புற மக்களாலேயே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன; இவை தானிய உணவாகவும், மாவுப் பொருட்களாகவும் மக்களால் பயன்படுத்தப்பட்டன; கால்நடை, கோழி போன்றவற்றுக்குத் தீவனம் மற்றும் தானிய உணவாகவும் வழங்கப்பட்டன.
சங்க இலக்கியத்தில் புன்செய் சாகுபடி
புல்லே னடைமுதல் புறவு சேர்ந்திருந்த
புன்புலச் சீறூர், நெல்விளை யாதே;
வரகும் தினையும் உள்ளவை யெல்லாம் – 328:1-3 – புறநானூறு
‘புல்லென்ற தழையும் அடிமரமுமுடைய காடுகள் நிறைந்த முல்லை நிலங்களான புன்செய் நிலங்களையுடைய சிற்றூர்களில், நெற்பயிர் விளையாது; வரகும் தினையும் மட்டுமே விளையும்’ என்று புன்செய் நிலத்தில் சாகுபடியாகும் தானியங்கள் புறநானூற்றில் பதிவு பெற்றுள்ளன. சிறுதானியங்களின் தாவரவியற்பெயர்களும் பொதுப்பெயர்களும் வருமாறு:-
சிறுதானியங்கள் பட்டியலில்
Botanical name Common name
கம்பு – Pennisetum glaucum – Pearl Millet
குதிரைவாலி – Echinochloa crus-galli – Barnyard Millet
கேழ்வரகு – Eleusine coracana – Finger Millet
சிறுசாமை – Panicum sumatrance – Little millet
பெருஞ்சாமை – Panicum miliaceum – Proso Millet
(பனிவரகு)
சோளம் – Sorghum vulgare – Sorghum
தினை – Paspalum scrobiculatum – Kodo millet
வரகு – டஹள்ல்ஹப்ன்ம் ள்ஸ்ரீழ்ர்க்ஷண்ஸ்ரீன்ப்ஹற்ன்ம் – ஓர்க்ர் ம்ண்ப்ப்ங்ற்
இதர தானியங்கள்
பெருந்தானியங்கள், சிறு-குறு தானியங்களையே அல்லாமல், மிகச்சிறய அளவில் இருக்கும் தானியங்களும் உள்ளன (புல்லின் விதைகள்). அவற்றைச் சேகரிப்பது என்பதும், உணவாக்குவது என்பதும் முயற்சி மிகுதியும் தேவைப்படும் மிகவும் கடினமான செயலாகும். உணவு கிடைக்காத காலங்களில் மலைசாதிப்பிரிவினர்களுள் ஒருசிலர் இவற்றை (புல்லரிசிகளை) உணவாகக் கொள்கின்றனர். எஞ்சிய புற்குடித்தாவரங்கள் ஊர்வன – பறப்பனவற்றுக்கு உணவாகப் பயன்படுகின்றன; இவற்றின் தாள்கள் விலங்கினங்களுக்குத் தீவனமாகின்றன. இதுகாறும் கண்ட தானிய வகைகளைக் கீழ்க்காணும் பட்டியல்களில் தொகுத்துக்காணலாம்.